Dinakaran Astrology

dinakaran astrology

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்த சஷ்டியாகும். சஷ்டி என்றால் 6. ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தப் பெருமானை வழிபடுவதே சஷ்டி விரதம். 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருக்கலாம். சஷ்டியன்று விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

முருகனுக்கு பல்வேறு விரதங்கள், உற்சவங்கள், வழிபாடுகள் இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் சிறப்பானதாக சஷ்டி விரதம் கூறப்பட்டுள்ளது. ‘சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்’ என்பார்களே, அது கந்த சஷ்டி விரத மகிமையை வெளிப்படுத்தும் வகையில் உருவானதுதான். ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற வாக்கியமே மருவி இவ்வாறு மாறியிருக்கிறது. அதாவது, சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் சிசு தோன்றும். சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை மனதார வேண்டினால் சற்புத்திர யோகத்தை அருள்வார்.

அகப்பை என்பது கருப்பையை மட்டுமல்ல, நமது ‘அகம்’ என்கிற மனத்தையும் குறிக்கிறது. நம் மனதில் இருக்கிற பேராசை, வெறுப்பு, ஆணவம், கோபம், வஞ்சம் தீர்த்தல், கருமித்தனம் உள்பட பல்வேறு தீய குணங்களையும் அழித்து நமக்கு நல்வழி காட்டுகிறார் முருகப் பெருமான். முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரத்தில் கிருத்திகை, திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை. இந்நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது சகல தடைகளையும் நீக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

நீர் விரதம், பால் விரதம், மவுன விரதம் என பலவகை விரதங்கள் உண்டு. அவரவர் குடும்ப வழக்கப்படி இதை அனுசரிப்பார்கள். முருகனின் அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகளையும் கந்த சஷ்டியன்று செய்வார்கள்.

சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் காலை, மாலை இரு வேளையும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்யலாம். மனதை ஒருமுகப்படுத்தி இவற்றை சொல்லி முருகனை துதிப்பது நற்பலன்களை தரும்.

ஜாதக அமைப்பின்படி செவ்வாய் திசை, குரு திசை நடப்பவர்கள், நிலப் பிரச்னை, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹார தரிசனம் செய்தால் சூரனை வேல்கொண்டு அழித்ததுபோல நமது பிரச்னைகளையும் கந்தப்பெருமான் வேலாய் வந்து நின்று அழித்து வளமிகுந்த வாழ்வை அருள்வார் என்பது நம்பிக்கை.

முருகனை குறித்து செய்யப்படும் அர்ச்சனையில் ‘சஷ்டிப் பிரியாய நம’ என்று வரும். சஷ்டிப் பிரியனான முருகனை கந்தசஷ்டியன்று வழிபடுவோம். சகல நலன்களும் பெறுவோம்.

dinakaran astrology/

Numberlogy Software in Tamil | Tamil Astrology Software

dinakaran astrology/

Comments are closed.